ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய்க் காலம் (Periods Time) கொஞ்சம் கஷ்டமான நாட்கள் தான். இதற்கு முக்கிய காரணம் உடலில் ஏற்படக்கூடிய சில அசவுகரியங்கள் மட்டுமல்லாது மன நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான பெண்களுக்கு Periods நேரத்தில் வயிறு மற்றும் இடுப்பு வலி இருக்கும். இன்னும் சிலருக்கு கால், தொடை, வயிறு என உடல் முழுவதும் வலி ஏற்படும். மேலும் சில பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களிலோ அல்லது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்போ வாந்தி வருவது போன்ற உணர்வு, தலைவலி, காய்ச்சல் கூட ஏற்படும். இதைத்தான் பீரியட்ஸ் ப்ளூ (Period Flu) என்று அழைக்கிறார்கள்.
இந்த அறிகுறிகள் எல்லா மாதமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த மாததிற்கான ஹார்மோன் மாறுபாடுகளை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். மேலும் சில பெண்களுக்கு Periods முடிந்த பிறகு உடல் அசதி, கை கால் வலி, சோர்வு, சோம்பல், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
மேலும் இவ்வாறு ஏற்படும் அறிகுறிகளில் சில கருத்தரிப்பு ஏற்படும் போது உண்டாகும் அறிகுறி போல தெரியலாம். உடனே பயப்பட வேண்டாம். பொறுமையாக 2-3 நாட்கள் Periods வருகிறதா என்று பாருங்கள். அப்போதும் Periods ஆகவில்லை என்றால் வீட்டிலேயே கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை கண்டறியும் வழிமுறைகள் உள்ளன. அதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை கர்ப்பம் ஏற்பட்டு, நீங்கள் கர்ப்பத்தை தவிர்க்க விரும்புகிறீர்கள் எனில் கர்ப்பம் ஆகிவிட்ட பதட்டத்தில் கண்ட மாத்திரைகளை உண்ணாதீர்கள். அது கண்டிப்பாக பயங்கர பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மருத்துவரை சந்திப்பதே நல்லது.
அதேபோல மாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். சில வீட்டு வைத்தியங்களையும், எளிய சில முறைகளை பின்பற்றினாலே போதுமானது. இந்த நாட்களை எளிதாக நம்மால் கடந்து விட முடியும்.
1. மாதவிடாய் சமயத்தில் அடி வயிற்றில் அதிக வலியோ, அல்லது வயிறு ஒருமாதிரி பிடித்துக்கொண்டது போல இருந்தால் ‘ஹீட்டிங் பேடு’ பயன்படுத்துங்கள். ஹீட்டிங் பேடு இல்லை எனில் உங்கள் வீட்டில் அரை லிட்டர் வாட்டர் பாட்டில் இருந்தால் அதில் மிதமான சூட்டில் தண்ணீர் நிரப்பி அதை லேசாக வயிற்றில் வைத்து எடுக்கலாம். விட்டு விட்டு ஒரு 5 நிமிடங்கள் செய்யும் போது உங்களுக்கே வலி குறைந்து ஒருவித ரிலாக்ஸ் ஏற்படும்.
2. முடிந்த அளவு Periods ஏற்பட போகும் நேரங்களில் கடினமான வேலைகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். உடலுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்
3. Period சமயங்களில் வாந்தி போன்றவையோ அல்லது அதிகப்படியான சூட்டினால் வயிற்றுப்போக்கு உண்டானால் நிச்சயம் உடலில் நீர் சத்து குறைந்து போய், Dehydration உண்டாகும். அந்த சமயங்களில் அதிகளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறு, கஞ்சி போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
அதே சமயம் சிலர் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களை குடிப்பார்கள். அது periods வலியை குறைக்கும் என்று கூட சொல்லுவது உண்டு. ஆனால் அது ஒருவிதமான நமது எண்ணம் மட்டுமே. மேலும் அதுபோன்ற சர்க்கரை அதிகமான பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களை தொடர்ந்து Periods சமயங்களில் குடிக்கும் போது அது PCOD போன்ற வேறு விதமான பிரச்சனைக்கு வழி வகுக்கும்.
4. Periods நேரத்தில் உடல் இயக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகிறதோ அதே போல மனநிலையும் கொஞ்சம் மாறுபடும். காரணமே இல்லாமல் கோவம் வருவது, Stress, மனசோர்வு, தேவையில்லாத கவலை போன்றவை ஏற்படும். ஆனால் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். முடிந்த அளவு உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள பிடித்த பாடல்களை கேட்பது போன்ற விஷயங்களை செய்து கொள்ளலாம்.
5. இரவு அதிக நேரம் கண்முழித்து செல்போன் பார்ப்பது போன்றவற்றை இதுபோன்ற சமயங்களில் மொத்தமாக தவிர்த்து விடுங்கள். சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது இன்னும் உடல் ஹார்மோன்களில் பல ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும்.
6. வெந்தயம், சீரகம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை Tea வடிவில் மிதமான சூட்டில் குடிக்கலாம். அதோடு காரம் குறைந்த உணவுகளையும் அதிகப்படியான காய்கறிகளையும் எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
இதையும் தாண்டி தாங்கிக்கொள்ள முடியாத அளவு வலியோ மற்ற அறிகுறிகளோ தெரிந்தால் மருத்துவரை சந்திப்பதே சிறந்தது.
இனி மாதவிடாய் வந்து விட்டதே என்ற கவலை வேண்டாம்.. இதுபோன்ற சிறு சிறு மாற்றங்களை நாம் செய்து கொள்ளும் போது நம்மால் எளிதாக மாதவிடாய் காலங்களை சமாளிக்க முடியும்.