பொதுவாக பல்வலியை விட பற்கூச்சம் பெரும் தொந்தரவை தரக் கூடியது. மேலும் மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகித மக்கள் பற்கூச்சத்தால் பாதிக்கப் பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களே பற்கூச்சத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. சிலருக்கு மிகவும் குளிர்ந்த ஜூஸ், ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அல்லது அதிக சூடான பானம் குடிக்கும்போது சுரீர் என பற்களில் ஒருவித வலியுடன் கூச்சம் ஏற்படும். பொதுவாக பற்களின் எனாமல் குறைவதே பற்கூச்சத்திற்கு முக்கிய காரணம்.
1. அதிகளவு இனிப்புகளை உண்பது
2. நீண்ட நேரம் பற்களை துலக்குவது
3. அதிக அமிலத்தன்மை கொண்ட பேஸ்ட், மௌத் வாஷ் பயன்படுத்துவது
4. பற்களை கடிப்பது
5. பற்களை விட்டு ஈறு விலகுவது, பற்சிதைவு
6. பற்களை வெண்மையாக்கும் சிகிச்சை போன்ற காரணங்களிளால் எனாமல் தேய்வதால் பற்கூச்சம் ஏற்படுகிறது.
குணப்படுத்தும் முறை
1. வெதுவெதுப்பான நீரை ஒரு கோப்பையில் எடுத்து கொள்ளுங்கள்.. அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.. இந்த தண்ணீரை கொண்டு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். உடனடி பலனை கொடுக்கும் இம்முறையை தினமும் காலை மாலை செய்யும் போது பற்களின் கிருமிகளை நீக்கி, ஈறுகளை பலப்படுத்தி,பல் கூச்சத்திலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
2. ஒரு துளி கிராம்பு எண்ணெயை விரலில் எடுத்துக்கொண்டு மெதுவாக ஈறுகளில் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனையும் காலை மாலை என இரு வேளையும் செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்..
3. தினமும் இரண்டு கொய்யா இலைகளை நன்கு மென்று தின்று வரவேண்டும். அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் கொய்யா இலைகளில் உள்ளன. மேலும் கிருமிகளை எதிர்த்து போராடி, பற்கூச்சத்தை கொய்யா இலைகள் கட்டுப்படுத்தும்.
4 நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை தினமும் வாயில் 1 ஸ்பூன் ஊற்றிக்கொண்டு 10 முதல் 15 நிமிடங்கள் வாயில் வைத்துவிட்டு துப்பிவிடவேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இம்முறையும் சிறந்த பலனைக் கொடுக்கும்.
பற்கூச்சம் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
1. சிட்ரஸ் போன்ற அமிலத்தன்மை அதிகம் கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
2 சோடா போன்ற கார்பனேட்டட் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
3. அதிக நேரம் பல் துலக்கும் போது பல் எனாமல் தேய்ந்துவிடும் எனவே இதை தவிர்க்க வேண்டும்.
4. வெண்மையான பற்களுக்கான சிகிச்சைக்கு முன், மருத்துவரிடம் இதன் விளைவு பற்றி நன்கு கேட்டு அறிந்து கொண்டு பின்னர் செய்து கொள்ள வேண்டும்.
5. பற்களை தூக்கத்தில் கடிக்கும் பழக்கம் இருந்தால் அதற்கு உரிய சிகிச்சை மற்றும் க்ளிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.