பொதுவாக பெண்கள் அணியும் பிரா ( Bra) பற்றிய சந்தேகங்களை பல பெண்கள் சங்கோஜப்பட்டு வெளியே கேட்பது இல்லை. ஆனால் பெண்கள் உள்ளாடை பற்றிய சந்தேகங்களை நிச்சயம் தீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதுவும் குறிப்பாக பெண்கள் எப்போது இருந்து Bra அணிய வேண்டும். எந்த வயதில் இருந்து அணியத் துவங்க வேண்டும் என்பதில் பெண் பிள்ளைகள் மட்டுமல்லாது அவர்களது அம்மாக்களுக்கும் நிறைய சந்தேகம் உள்ளது.
பொதுவாக ஒரு பெண் 12-13 வயதை அடையும் போது அவளது மார்பகம் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது. உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு 12 வயதிற்கு முன்பாகவே மார்பக வளர்ச்சி இருக்கும். அதே சமயம் மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு 12 வயதைக் கடந்தும் மார்பக வளர்ச்சி குறைவாக இருக்கலாம். அது அவரவர் உடல்வாகு.
இப்படி தீடீரென ஏற்படும் மார்பக வளர்ச்சி சில பெண் பிள்ளைகளுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு உளவியல் ரீதியான குழப்பத்தை உண்டாக்கலாம். எனவே பெண் பிள்ளைகளின் அம்மாக்கள் 10 வயது முதலே மார்பக வளர்ச்சி பற்றிய புரிதலை பெண் பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும்.
அதே போல சில பெண் பிள்ளைகள் பருவ வயதை அடையும் போது அவர்களது தோழிகளின் உடல் வாகுடன் தன்னுடைய உடல்வாகை ஒப்பிடத் தொடங்குவார்கள். அது சில பிள்ளைகளுக்கு தாழ்வு மனப் பான்மையை உண்டாக்கும். ‘என்ன பிரச்சனை இருந்தாலும் சந்தேகம் இருந்தாலும் என்னிடம் கேட்கலாம்.. நான் அம்மா மட்டும் இல்லை..!! உன்னுடைய தோழி..!!’ என்ற நம்பிக்கையை பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் கொடுக்க வேண்டும்.
பொதுவாக அக்காலத்தில் வீட்டிலேயே காட்டன் துணியால் ஆன எவ்வித கப் அமைப்பும் இல்லாத வகையில் பிரா தைத்து பெண் பிள்ளைகள் அணிந்து கொள்வார்கள். ஆனால் தற்போது பலருக்கும் அது சாத்தியமில்லை. எனவே Bra வைப் பொறுத்தவரை முதன் முதலில் பிள்ளைகளுக்கு beginners Bra அல்லது Teenager Bra வாங்கிப் பயன்படுத்தலாம்.
இந்த Teenager Bra வில் எவ்வித கப் மற்றும் பிட்டிங் இருக்காது. அதிலும் அவர்கள் பள்ளிக்கூட யூனிபாஃர்மிற்கு ஏற்ற வகையில் Braவை தேர்ந்து எடுங்கள். சில பெண் பிள்ளைகள் Bra அணியத் தயங்குவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு பிராவிற்கு ஏற்ற வகையில் உடையை தேர்ந்தெடுத்து அதை அணிய வைத்து கண்ணாடி முன்பாக நிற்க வைத்து, பிரா வெளியே தெரியாது என்றும் பிரா அணிவதால் ஏற்படும் நன்மையையும் அந்த பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
அதேபோல் மார்பக வளர்ச்சி குறைவாக இருக்கும் பெண் பிள்ளைகளை, ‘உனக்கு தான் மார்பக வளர்ச்சி இல்லையே..!! உனக்கு பிரா தேவையில்லை..’ என்பது போல கூறாதீர்கள். அது அவர்களது தன்னம்பிக்கையை சிதைத்து விடும். அதுபோன்ற மார்பக வளர்ச்சி குறைவாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்ற வகையிலும் பிரா உள்ளது. அதை வாங்கி அவர்களை அணியச் செய்யலாம்.
இவ்வாறு பெண் பிள்ளைகளின் உடலியல் மாற்றத்தை அவர்களுக்கு புரிய வைத்து அதற்குரிய வகையில் அணிய வேண்டிய பிரா போன்ற ஆடைகளை பற்றியும் அவர்களுக்கு விளக்கி பெண் பிள்ளைகளை தன்னம்பிக்கை மிகுந்த எதிர்கால பெண்மணிகளாக உருவாக நீங்கள் உதவுங்கள்..!!