How to Prepare Natural Hair Dye at Home

கார்மேகம் போல கருப்பான அழகான முடி வேணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனா பலருக்கும் ஆசை மட்டும் தான் இருக்கும். முடியை பராமரிக்க நேரம் இருக்காது. இருந்தாலும் வெள்ளை முடியை ( White Hair) அப்படியே விட்டுவிட முடியுமா..? அதனால் செயற்கை ஹேர் டை களை ( Hair Dye) கடையில் வாங்கி முடியில் தேய்த்து முடியை கருப்பாக்கிவிட்டு நிம்மதி பெருமூச்சு விடுவோர்கள் தான் இப்போ அதிகமா இருக்காங்க. 

தற்போது நிம்மதி தரும் இத்தகைய Hair Dye ஆனது பின்னாளில் நாம் வருத்தப்பட பெரும் காரணமாக மாறும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். முகத்தில் ஏற்படும் கருமை தொடங்கி, முடி உதிர்வு, சரும அலர்ஜி என்று பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம். தொடர்ந்து பயன்படுத்தும் போது கண் பார்வையை பாதிக்கும் அளவு ஆபத்தானது தான், நாம் இப்போது பயன்படுத்தும் Hair Dye..

இந்த ஆபத்தான செயற்கை Hair Dye விட்டுட்டு இயற்கை ஹேர் டைக்கு ( Natural Hair Dye) மாறுங்க. அதுவும் ரொம்ப ஈஸியா நம்ம வீட்டுலயே குறைந்த செலவுல இந்த இயற்கை ஹேர் டையை நாம பண்ணலாம்.. நிச்சயம் பலன் இருக்கும். எந்த Side Effect இல்லாம நாம முடியை வாழ்நாள் முழுவதும் நம்மளால கருப்பா அதேநேரம் ஆரோக்கியமா வச்சுக்க முடியும். வாங்க இயற்கை ஹேர் டை ( Homemade Natural Hair Dye) எப்படி பண்ணலாம்னு இப்போ பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

1. நெல்லிக்காய் பொடி – 2 ஸ்பூன்

    (Amla Powder) 

2. அவுரி பொடி – 3 ஸ்பூன் 

     ( Indigo Powder or Auri powder) 

3. மருதாணி இலை பொடி – 2 ஸ்பூன் 

     ( Henna Powder) 

4. கரிசலாங்கண்ணி பொடி – 2 ஸ்பூன் 

     (Bhringaraj Powder)

5. தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

     ( Coconut Oil) 

6. எலுமிச்சை சாறு –  2 ஸ்பூன் 

     ( Lemon Juice) 

7. தயிர் or Tea டிகாஷன் – தேவையான    

    அளவு ( Curd or Tea decoction) 

முதலில் ஒரு இரும்பு வாணலி எடுத்துக்கோங்க. இயற்கை டை பண்ணும் போது இரும்பு சட்டில பண்ணுறது தான் சிறந்தது. இரும்பு வாணலியில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி எடுத்து அடுப்புல வச்சு வறுக்க ஆரம்பிங்க. அடுப்பை குறைஞ்ச தீயில வச்சு வறுங்க. நெல்லிக்காய் பொடி கருப்பா மாறும் வரை வறுக்கணும். அடுத்து அதோட அவுரி பொடி 3 ஸ்பூன் சேர்த்து வறுங்க. இதுவும் நல்லா கருப்பா மாறனும். அடுத்தது கரிசலாங்கண்ணி பொடியும் சேர்த்து கருப்பா வறுத்துக்கோங்க. மூன்றும் சேர்ந்து இப்போ கருப்பு கலர் பொடியா இருக்கும். அடுப்பை Off பண்ணிட்டு இந்த பொடியை கொஞ்சம் ஆற வையுங்க.

ஆறியதும் அதுல 2 ஸ்பூன் மருதாணி பொடி, 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நல்லா Mix பண்ணுங்க. ரொம்ப கட்டியா இருந்தா தயிர் அல்லது புளித்த மோர் அல்லது டீ டிகாஷன் இதுல ஏதாவது ஒன்று சேர்த்து பேஸ்ட் மாதிரி மாத்திக்கோங்க. இது எல்லாமே அதே இரும்பு சட்டிலேயே தான் பண்ணனும். 

இந்த பேஸ்ட் ராத்திரி முழுவதும் அப்படியே இரும்பு சட்டியிலேயே இருக்கட்டும். அடுத்த நாள் காலை தலைமுடி முழுவதும் தேய்த்து 2-3 மணி நேரம் ஊறவையுங்க. காலையில தேய்க்கும் போது கட்டியா இருந்தா சிறிது மோர் அல்லது தண்ணீர் சேர்த்து சரியான பேஸ்ட் பதத்துக்கு கொண்டு வந்துடுங்க. 

நல்லா தலையில ஊறி காய்ந்ததும் 3 மணி நேரத்துக்கு அப்புறமா சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்தி முடியை அலசிடுங்க. இந்த முறையை அதிக நரை முடி இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது லேசான நரை இருந்தால் மாதம் ஒருமுறை பண்ணுங்க. தொடர்ந்து இம்முறையை செய்யும் போது நரை முடி பிரச்சனை மட்டுமல்லாமல் முடி உதிர்வும் நின்று விடும். 

இந்த இயற்கை டையில் இருக்கும் மருதாணி இலை முடியின் நிறத்தை பாதுகாப்பதோடு உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி அனைத்துமே முடிக்கு வலு சேர்க்கும். அவுரி தான் முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும். அதனால் தான் மற்ற பொடிகள் 2 ஸ்பூன் என்றால் அவுரி 3 ஸ்பூன் சேர்க்கிறோம். மேலும் சளி அடிக்கடி பிடிக்கும் நபர்கள் எனில் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாம். எண்ணெய் ஏன் சேர்க்கிறோம் என்றால், மருதாணி சேர்ப்பதால் முடி லேசாக வறண்டு விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் தான் எண்ணெய் மற்றும் தயிர் சேர்க்கிறோம். இது முடியின் வறட்சியை நீக்கி பளபளப்பு தன்மையைக் கொடுக்கும். 

இந்த இயற்கை டை யை பெரியவர்கள் மட்டுமல்ல, இளநரை உள்ள இளம் வயதினரும் பயன்படுத்தலாம். மேலும் காலை மற்றும் மதிய நேரத்தில் இந்த டையை பயன்படுத்துங்கள். மாலை, இரவு கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில் மருதாணி, எலுமிச்சை தயிர் போன்றவை உடலில் அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தி சளி, தலைவலியை ஏற்படுத்தி விடும். அதே போல பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தாராளமாக இந்த இயற்கை டையை பயன்படுத்தலாம். 

குறிப்பு : 

இதில் சொல்லப்பட்டுள்ள அளவு ஒரு மீடியம் அளவு முடி உள்ள நபர்களுக்குத் தான் . உங்கள் முடி நீளம் எனில் இந்த அளவினை கூட்டிக் கொள்ளுங்கள். அதேபோல் முடி அடர்த்தி மற்றும் நீளம் குறைவாக உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் போது, இதில் ஒவ்வொரு பொருளும் பாதி அளவு எடுத்துக்கொண்டால் போதுமானது. 

குறைந்த விலையில் எவ்வித Side Effect இல்லாம வீட்டிலேயே எளிமையா செய்யக்கூடிய இந்த இயற்கை டையை  ( Homemade Natural HairDye) கண்டிப்பாக ட்ரை பண்ணிப் பாருங்க..!!