நமது சருமத்தில் ஒவ்வொரு நாளுமே எண்ணற்ற செல்கள் உருவாகும். அதே போல் பல செல்கள் இறக்கவும் செய்யும். இவ்வாறு இறந்து போகும் செல்களை நமது சருமமானது அதன் துவாரத்தின் வழியே வெளியேற்றிவிடும்.
எனினும் நமது சரும துவாரத்தில் தூசி மற்றும் அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் துவாரத்தில் இருந்து வெளியே செல்லாமல் அப்படியே தங்கிவிடும். இதனால் நமது சருமம் சொரசொரப்பு அடைந்து நாளடைவில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை அளிக்கும்.
எனவே கட்டாயம் சரும துவாரத்தில் உள்ள அழுக்குகளை நாம் அகற்ற வேண்டியது முக்கியம். இதற்கு தினமும் நன்றாக நமது முகத்தை கழுவினால் போதும். இருந்தாலும் விடாப்படியான இறந்த செல்கள் துவாரங்களை விட்டு வெளி வராது. இத்தகைய விடாப்படியான இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் நாம் அகற்றலாம்.
கடைகளில் நிறைய ஸ்க்ரப் பேக் கிடைக்கின்றன. எனினும் பல ஸ்க்ரப்பரை Facial Scrubs நாம் முகத்தில் பயன்படுத்தும் போது சருமத்தை டேமேஜ் செய்துவிடும். எனவே வீட்டிலேயே இயற்கையாக நாமே ஸ்க்ரப் தயாரிக்க முடியும். அவ்வகையில் சூப்பரான 3 ஸ்க்ரப் பேக்குகளை தற்போது நாம் பார்க்கலாம்.
1. மாம்பழ ஸ்கரப்
நன்றாக கனிந்த மாம்பழத்தை எடுத்துக்கொண்டு அதன் காம்பு பகுதியை நீக்க வேண்டும். பின்பு மாம்பழத் துண்டுகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் அரைத்த மாம்பழ பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன், 2 டேபிள் ஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை, 1 டீஸ்பூன் பால் மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
நமது முகத்தை நன்றாக கழுவ வேண்டும். பின்னர் முகத்தின் ஈரத்தை துடைத்து விட்டு, இந்த ஸ்கரப் பேக் முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவேண்டும். நமது முகம் மட்டுமல்லாது கழுத்து, கை கால்கள், உதடு, போன்ற பகுதிகளில் கூட நாம் ஸ்கரப் செய்யலாம்.
இதனை வாரம் இருமுறை செய்யும் போது முகத்தில் நாட்பட்ட இறந்த செல்கள் வெளியேறி முகம் பளிச்சென மாறும். இந்த ஸ்கரப் பேக்கினை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.
2. ஆரஞ்சுப் பழ ஸ்கரப்
ஆரஞ்சு பழச்சாறை பிழிந்துகொண்டு அதன் விதைகளை நீக்கிக் கொள்ள வேண்டும். 4 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் , 1 டீஸ்பூன் தேன் கலந்து ஸ்கரப் பேக்கினை தயாரிக்கவும். இந்த ஆரஞ்சு ஸ்கரப் பேக்கினை வாரத்தில் 3 நாட்கள் செய்யும் போது சுருக்கங்கள் அகன்று, முகம் சுத்தமாகி பொலிவும் அதிகரிக்கிறது.
3. எலுமிச்சை ஸ்கரப்
எலுமிச்சை சாறு சில துளிகள் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, 1 டீஸ் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து இந்த ஸ்கரப் பேக்கினை தயாரிக்க வேண்டும். பின்னர் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து பின் குளிந்த நீரால் முகத்தை கழுவுங்கள். வாரம் இருமுறை இந்த முறையை செய்யலாம்.
இந்த 3 எளிமையான இயற்கையான பழ ஸ்கரப் பேக்குகளை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். சருமத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இறந்த செல்களை அகற்றி இளமையான தோற்றத்தை பெறலாம்.