13 Easy Steps to Wear Traditional Iyer – Iyengar Madisar Saree

என்னதான் உலகம் நவீனமாக சென்று கொண்டு இருந்தாலும் பலவித மார்டன் உடைகள் வந்தாலும் பெண்கள் நமது பாரம்பரிய உடையான புடவை ( Saree Draping) கட்டிக் கொள்வது தனி அழகு தான். இத்தகைய புடவை கட்டும் முறையானது நமது இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மற்றும் மாநிலத்தை பொறுத்து வேறுபடுகிறது. 

இந்தப் பதிவில் மடிசார் எப்படி கட்டுவது (How to wear Madisar saree) என்பதைப் பார்க்கலாம். அக்காலத்தில் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்கள் இந்த முறையில் புடவை கட்டுவது கட்டாயமாக ( Traditional Madisar Saree) இருந்தது. தற்போது தினசரி கட்டுவது வழக்கத்தில் இல்லை என்றாலும் விழா சமயத்தில் இம்முறையில் புடவை கட்டிக் கொள்ளும் முறை உள்ளது. 

மடிசார் புடவையை பொருத்தவரை இரு முறையில் கட்டுவார்கள். சைவ பிரிவை சேர்ந்த பெண்கள் மாராப்பு  என்று அழைக்கப்படும் தலைப்பை வலது புறம் மடித்துக் கட்டுவார்கள், வைணவ பிரிவை பின்பற்றும் பெண்கள் தலைப்பை இடது புறம் மடித்துப் போடுவார்கள். இதுமட்டுமே வேறுபடும். மற்றபடி கட்டும் முறை ஒன்று தான். 

நமது சாதாரண புடவைக்கு 6கஜம் (6 yards) நீளம் போதுமானது. ஆனால் மடிசார் புடவையை பொறுத்தவரை நீளம் அதிகம் தேவைப்படும். எனவே 9 கஜம் (9 yards) புடவை என்று கடைகளில் கேட்டால் கிடைக்கும். தற்போது 6 கஜத்திலும் மடிசார் கட்டுகிறார்கள். எனினும் 9 கஜம் தான் பாரம்பரிய மடிசார் புடைவை கட்டுவதற்கு தேவை. மேலும் தற்போது காட்டன் முதல் பட்டு வரை அனைத்து வகை துணிகளில் மடிசார் புடவை நமக்கு கிடைக்கிறது. 

மடிசார் புடவையின் மற்றொரு சிறப்பு என்னவெனில் நாம் சரியாக புடவையை கட்டி விட்டால் எவ்வளவு நேரம் ஆனாலும் உடலில் இருந்து விலகாது, நழுவாது அவிழாது, காற்றில் பறக்காது. தற்போது எப்படி மடிசார் கட்டுவது என்பதைப் பார்க்கலாம். 

Reference Image 

மடிசார் கட்டும் முறை 

How to Tie Iyer Madisar saree 

1. மடிசார் கட்டுவதற்கு 3/4 பேண்ட் உள்ளே அணிந்து கொள்ளலாம். அல்லது Inner skirt அணியலாம். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்குமோ அணிந்து கொள்ளலாம். 

2. முதலில் புடவையின் முந்தானைக்கு மறுமுனையை ( உள் முந்தி) எடுத்து கொள்ளுங்கள். அதனை 8-10 சிறிய கொசுவமாக (Pleats) மடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சற்று குண்டாக இருந்தால் பிளீட்ஸ் சற்று குறைவாக வைத்துக் கொண்டால் சற்று ஒல்லியாகக் காட்டும். 

3. அவ்வாறு மடித்த கொசுவத்தை உங்களுக்கு இடது புறம் வழியாக கொண்டு சென்று  உங்கள் இடுப்பின் பின்புறம் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு மறுபுறம் புடவையை எடுத்து பிளீட்ஸ் உடன் உடலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி முன்புறம் கொண்டு வந்து கொள்ளுங்கள். பிளீட்ஸ் பின்புறம் வெளியே தெரிய வேண்டும். 

4. தற்போது முன்புறம் தொப்புள் (navel) பக்கத்தில் புடவையை இடதுபுறம் ஒரு இன்ச் மற்றும் வலது புறம் ஒரு இன்ச் எடுத்து 2 முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை இறுக்கமாக போட்டுக் கொள்ளுங்கள். இதுவே புடவை அவிழாமல் பார்த்துக் கொள்ளும்.  

5. முடிச்சு போட்ட பிறகு முடிச்சு போட்ட இடத்தின் அருகே கால் நீளம் இருக்கும் புடவையின் முனையை எடுத்து அதனை தொப்புளின் இடது புறம் சொருகிக் கொள்ள வேண்டும். 

6. தற்போது இடது புறம் சொருகியதும் அதே பகுதியை தொப்புளின் வலது புறமும் சிறிது சொருக்கிக்கொள்ள வேண்டும். தற்போது உங்கள் தொப்புள் அருகே புடவை ஒரு பை போன்ற வடிவில் இருக்கும். 

7. தற்போது உங்கள் கால்களை சற்று அகற்றி புடவையை காலுக்கு அடி வழியே பின்பக்கம் கொண்டு சென்று பின்புறம் கொசுவத்துக்கு பக்கத்தில் சொருக்கிக் கொள்ள வேண்டும். இதை கச்சம் (Kaccham) என்று சொல்லுவார்கள். 

8. தற்போது கச்சம் சொருகிய பின்பு பார்க்கும் போது நீங்கள் Pleated பேண்ட் அணிந்திருப்பது போல பார்ப்பதற்கு இருக்கும். 

9. பின்புறம் கச்சம் சொருகிய இடத்தில் இருந்து புடவையின் நுனியை எடுத்து ஒரு ட்விஸ்ட் செய்து அதனை உங்கள் இடது புறம் வழியாக கொண்டு வாருங்கள்.

10. இடது புறமாக ஒரு முழு சுற்று சுற்றிய பிறகு உங்கள் முந்தானையை வலது புறமாக மடித்து போட்டு புடவைக்கு தோள்பட்டையில் Safety Pin போடுவது போல போட்டுக் கொள்ளவும். 

11. மீதமிருக்கும் முந்தானையை கீழே தொங்க விடாமல் தலைப்பை ஒரு ட்விஸ்ட் செய்து சொருகிக் கொள்ள வேண்டும். 

12. பின்னர் காலை அகற்றி வைத்திருந்த இடத்தில் இருக்கும் சிறு சிறு கொசுவங்களை சரி செய்து முழங்கால் தெரியாமல் சரி செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் மடிசார் புடவையில் அம்சமாக இருப்பீர்கள். 

13. தற்போது கூறியது ஐயர் மடிசார் ( Iyer Madisar). இதுவே ஐயங்கார் மடிசார் ( Iyyengar Madisar) எனில் 9 வது point ல் குறிப்பிட்டபடி கச்சம் சொருகிய இடத்தில் இருந்து வலது புறமாக புடவையை கொண்டு வந்து உடலோடு ஒரு சுற்று சுற்றி இடது புறம் நாம் சாதாரண புடவை போல கட்டுவது போல மாரப்பை போட்டுக் கொண்டு பின் செய்து கொள்ளலாம். 

மீதமிருக்கும் தலைப்பை ஒரு ட்விஸ்ட் செய்து முன்புறம் செருகி கொள்ள வேண்டும். முந்தானை என்று கூறக்கூடிய மாராப்பு போடுவது மட்டுமே ஐயர் மடிசார் மற்றும் ஐயங்கார் மடிசார் கட்டும் முறையில் உள்ள முக்கிய வேறுபாடு ஆகும். 

நிச்சயமாக இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் மடிசார் புடவை கட்டிப்பாருங்கள். இதே போல பல விதங்களில் புடவை கட்டுவது எப்படி என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.